உலகின் மிகப் பெரிய பணக்காரரால் ஒரு புதிய காரை வாங்க முடியவில்லை
நீங்கள் யூகிக்கத் தொடங்கும் முன், நானே சொல்லிவிடுகிறேன் அந்த பணக்காரர் – ஜெஃப் பெசோஸ் (Amazon இன் CEO)
வாழ்க்கை அனுபவங்களால் ஆனது, எல்லாவற்றையும் அனுபவித்து உணர்வதற்கு ஒரு ஆயுள் போதாது. ஆகையால் நாம் பார்த்து வியந்த பிரபலங்கள், அவர்கள் ஆற்றிய உரைகள் அல்லது எழுதிய புத்தகங்களிலிருந்து வாழ்க்கை அனுபவங்களை படிப்பது மிகவும் எளிது.
நாம் செய்ய வேண்டியதெல்லாம், அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் அவர்களின் செயல்களைப் படித்து பார்த்து அவற்றை நன்கு உள்வாங்கி, நம் சொந்த வாழ்க்கையில் பயன்படுத்த வேண்டும்.
ஒரு காலத்தில் ஜெஃப் பெசோஸ் ஏழையாக இருந்தபோது என்ன செய்தார் என்பதை விட, ஜெஃப் பெசோஸ் பணக்காரராக இருந்தபோது என்ன செய்தார் (அல்லது செய்யவில்லை) என்பதைப் பார்ப்பது முக்கியம்.
சிறிய விஷயங்களில் கவனம் செலுத்தும் நாம், பெரும்பாலும் பெரிய விஷயங்களில் கோட்டை விடுகிறோம்.
10 ரூபாய், 20 ரூபாய்க்கு பேரம் பேசும் நாம், விலையுர்ந்த பொருட்களை வாங்கும்போது பேரம் பேசுவதில்லை. ஒவ்வொரு நாளும் கஷ்டப்பட்டு சேர்க்கும் 10, 20 ரூபாய்கள் எல்லாம் ஒரு பெரிய தேவையற்ற செலவில் நம் சேமிப்பை பூஜ்ஜியத்திற்கு கொண்டு செல்கின்றன.
அமேசான் நிறுவனத்தில் 10 பணியாளர்கள் மட்டுமே வேலை செய்ததில் இருந்து, ஜெஃப் பெசோஸின் நிகர மதிப்பு 12 பில்லியன் டாலர்கள் வரை, அவர் செவர்லே பிளேசரை (1987) ஓட்டினார். அவரின் தேவை அதிகம் என உணர்ந்த போது, ஹோண்டா அக்கார்டுக்கு (1997) மாறினார், சில ஆண்டுகள் கழித்து அவரது தேவைகளுக்கு போதுமான அடுத்த தலைமுறை ஹோண்டாவை வாங்கினார்.
பெசோஸ் நினைத்திருந்தால் ரோல்ஸ் ராய்ஸ் அல்லது புக்கட்டி போன்ற மிக விலையுர்ந்த ஆடம்பர கார்கள் நிறைய வாங்கி இருக்க முடியும். ஏன் அந்த நிறுவனத்தையே கூட வாங்கியிருக்க முடியும்.
ஆனால் அவரது விருப்பம் அவரது முன்னுரிமைகள் மற்றும் தனிப்பட்ட விருப்பங்களின் அடிப்படையில் அமைந்தது. அவரது தேவைக்கு ஹோண்டா போதுமானதாக இருந்தது. ரோல்ஸ் ராய்ஸ் தேவைப்படவில்லை. தன்னை யாரிடமும் விளம்பரப்படுத்தும் அவசியமும் அவருக்கில்லை.
விலையுயர்ந்த பொருட்களை வாங்கவோ அல்லது சில நேரங்களில் ஆடம்பரமாக வாழவோ கூடாது என்று கூறவில்லை. உங்களால் முடிந்தால் தாராளமாக வாங்குங்கள்.
ஆனால் அந்த பொருள் உண்மையில் தேவைதானா? அல்லது உங்களது செல்வாக்கை, சகாக்களிடம் உயர்த்தி கட்டுவதற்கான ஒரு செயலா என்பதை அடையாளம் காணுங்கள்.
பழைய ஐபோன் iPhone நன்றாக வேலை செய்தும், புதிய ஐபோன் வெளியிட்டவுடன், வரிசையில் நின்று வாங்குபவராக இருந்தால், யாரிடம் உங்கள் மதிப்பை கூட்டி காட்ட அதனை வாங்குகிறீர்கள் என்று யோசியுங்கள்!
உங்கள் மதிப்பு நீங்கள் வைத்திருக்கும் பொருட்களை வைத்து தான் அமையவேண்டுமா? சிந்தியுங்கள்!
மோர்கன் ஹவுஸ் தனது “The Psychology of Money” புத்தகத்தில் கூறியது போல்: “உங்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை மக்களுக்கு காட்ட பணத்தை செலவழிப்பது குறைவான பணத்தை வைத்திருப்பதற்கான விரைவான வழியாகும்.”