பங்குச் சந்தை – ஏன் நீங்கள் தெரிந்திருக்கவேண்டும்?

stock-exchange

நிதம்தோறும் பங்குச்சந்தையை பற்றிய ஏதோவொரு செய்தியை நம்மை அறியாமலேயே கடந்து சென்றிருப்போம். எங்கோ ஒரு ஊரில், ஏதோவொரு சந்தை ஏறுகிறது அல்லது இறங்குகிறது இதிலென்ன இருக்கிறது என்று கடந்து சென்றிருந்திர்கள் என்றால். உங்களுக்காக தான் இந்த கட்டுரை!

பங்குச் சந்தை என்பது அன்றாடம் நாம் செல்லும் காய்கறி சந்தை போன்றதொரு சந்தையாகும். என்ன இங்கு காய்கறிகளுக்கு பதில் பங்குகளை வாங்க அல்லது விற்க போகிறீர்கள்.

பங்குகள் என்பது குறிப்பிட்ட நிறுவனத்தில் உங்களின் உரிமையை குறிக்கின்றது. நீங்கள் ஒரு நிறுவனத்தின் பங்குதாரராக இருந்தால், அந்த நிறுவனத்தின் உரிமையில் சில சதவீதத்தை வைத்திருக்கிறீர்கள் என்று அர்த்தம்.ஒரு பங்குதாரராக நீங்கள் அந்நிறுவனத்தின் லாப நட்டங்களில் பங்குபெறுவீர்கள்.

பங்குச் சந்தைகள் பல நோக்கங்களுக்காக துவங்கப்பட்டாலும், அதன் முக்கிய நோக்கம் முதலீடு மற்றும் விரிவாக்கத்திற்கான மூலதனத்தை திரட்டுவது.

பங்குச் சந்தைகள் ஏன் இருக்கின்றன?

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த பங்குச் சந்தைகள் அவசியம். தனிநபர்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் போது அவர்கள் அந்த நிறுவனத்தின் வளர்ச்சியில் பங்கேற்று நிறைய லாபம் ஈட்டலாம் அல்லது நிறுவனங்கள் தங்கள் விரிவாக்கத்திற்கான முதலீடுகளை இங்கு திரட்டலாம்.

பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள் அரசங்கத்திற்கு நிறைய வரி செலுத்துகின்றன, அதன் மூலம் அரசாங்கத்திற்கு வருவாய் வருகிறது. அரசாங்கம் அந்த வருவாயை பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்துகிறது.

ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் பங்குச் சந்தை முக்கிய பங்கு வகிக்கிறது, பல நாடுகள் இந்த அளவுக்கு வளர்ச்சியடைய காரணம் பங்குச் சந்தைகள். அவை இல்லாமல் இந்த வளர்ச்சி சாத்தியமில்லை

இதனுடன், தனிநபர்களை செல்வந்தர்கள் ஆகவும் மாற்றுகிறது. இதனால் மக்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரம் முன்னேறுகிறது.

பொருளாதாரத்தில் பங்குச் சந்தைகள் ஏன் முக்கியம்?

நிறுவனங்கள் மூலதனத்தை திரட்ட உதவுகிறது – பங்குச் சந்தைகள் இல்லை என்றால், நிறுவனங்கள் பணத்தை திரட்ட வங்கியில் கடன் வாங்க வேண்டியிருக்கும். கடனை வட்டியுடன் செலுத்த வேண்டியிருப்பதால், இது நிறுவனத்திற்கு சுமையாக இருக்கும்.
பங்குச் சந்தைகளில், நிறுவனங்கள் பணத்தை திரட்டினால், திருப்பிச் செலுத்துவதைப் பற்றி கவலைப்படாமல் நிறுவனங்கள் வளர்ச்சியில் கவனத்தை செலுத்தலாம். ஒருவேளை நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டால் பணத்தை திரும்ப செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை.

இந்த வழியில் திரட்டப்பட்ட மூலதனம் நிறுவனங்களின் செயல்பாடுகளை விரிவுபடுத்தவும் பொருளாதாரத்தில் வேலைகளை உருவாக்கவும் உதவும்.
பொருளாதார கண்ணோட்டத்தில் பார்த்தால் நுகர்வோர் செலவினம் அதிகரிக்கிறது அதனால் அரசாங்கங்கள் வரி வருவாயில் இருந்து பயனடையலாம் மற்றும் வேலையின்மையும் குறையலாம்.

தனிப்பட்ட செல்வத்தை உருவாக்க உதவுகிறது – பங்குச் சந்தையின் மிக முக்கியமான நன்மைகளில் ஒன்று பொருளாதாரத்தில் செல்வத்தை உருவாக்கும் திறன். தனிப்பட்ட முதலீட்டாளர்கள், பெரு நிறுவனங்களில் முதலீடு செய்வதன் மூலம் அந்நிறுவனத்தின் லாபத்தில் பங்கு பெறலாம்.
அவர்கள் சம்பாதிக்கும் வருவாய் பொருளாதாரத்தில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும். பணப்புழக்கம் அதிகரித்தால் நாட்டில் தொழில்கள் விருத்தியடையும்

அந்நிய முதலீடு – பங்குச் சந்தை சிறப்பாகச் செயல்பட்டால், உள்ளூர் முதலீட்டாளர்களிடமிருந்து முதலீட்டை ஈர்ப்பது மட்டுமல்லாமல், வெளிநாட்டவர்கள் நம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் வாய்ப்பையும் உருவாக்குகிறது.
எடுத்துக்காட்டாக, அமெரிக்கர்கள் இந்திய NSE இல் பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம், இது இந்திய பொருளாதாரத்தின் GDP யை அதிகரிக்க உதவுகிறது.

பொருளாதாரத்தின் குறியீடு – பங்குச் சந்தையின் செயல்திறன் ஒரு நாட்டின் பொருளாதாரம் எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என்பதற்கான தோராயமான குறியீடாகும்.
பொருளாதாரம் வளர்ச்சி அல்லது மந்தநிலை உள்ளதா என்பதை பங்குச் சந்தையின் போக்கை வைத்து தீர்மானிக்கலாம். சந்தை ஏறுமுகத்தில் இருந்தால் நாடு வளர்ச்சி பாதையில் செல்கிறது என்று அர்த்தம். இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தின் நிலைக்கும் பங்குச் சந்தையின் செயல்திறனுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளதை எப்போதும் காணலாம்.

பங்குச் சந்தை அனைவரையும் பாதிக்குமா?

ஆம். நான் எதிலும் முதலீடு செய்யவில்லை, எனக்கும் பங்குச் சந்தைக்கும் எந்த சம்மந்தமும் இல்லையென்று நீங்கள் நினைத்தால். பின்வரும் தகவல் உங்களை ஆச்சரியப்படுத்த கூடும். பங்குகளில் முதலீடு செய்தாலும் செய்யாவிட்டாலும், சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களும் பங்குச் சந்தையின் செயல்திறனால் பாதிக்கப்படுகின்றனர். ஓய்வூதிய நிதி மற்றும் LIC போன்ற திட்டங்கள் பெரும் பணத்தை பங்குச்சந்தையில் முதலீடு செய்வதால் நீங்கள் மறைமுகமாக பங்குசந்தையில் முதலீடு செய்துளீர்கள்.
பங்குச்சந்தை எதிர்பார்த்த லாபத்தை தராதபோது நிறுவனங்கள் ஊழியர்களின் சலுகைகளை (ஓய்வூதியம்) குறைக்கலாம். மேலும், ஒரு நிறுவனத்தின் பங்கு வீழ்ச்சியடையும்போது, ​​நிறுவனங்கள் செலவினங்களைக் குறைக்க பல ஊழியர்களை பணிநீக்கம் செய்யலாம்.

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட வரிகள் மற்றும் வட்டி விகிதங்களையும் பங்குச் சந்தை பாதிக்கிறது. வட்டி அதிகரித்தால் நீங்கள குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் வாடகையை உயர்த்த கூடும். ஏனெனில் அவர் வீட்டுக்கடன் வாங்கியிருக்கும் பட்சத்தில் அவர் நிறைய வட்டி செலுத்த வேண்டி வரும்.

நீங்கள் ஒரு பிசினஸ் தொடங்க ஆசைப்படலாம். ஆனால் நடைமுறை சிக்கல்கள் அதிகம். பெரும்பாலான பிசினெஸ் கள் சில வருடங்கள் தாக்கு பிடிப்பதே கஷ்டம். ஆனால் உங்களுக்கு பரிச்சயமான ஒரு பிசினஸ் ஏற்கனவே தொடங்கப்பட்டு நன்றாக இயங்குகிறது அதன் வளர்ச்சியில் பங்கு பெற நினைக்கிறீர்கள் என்றால் பங்குச் சந்தைகள் உங்களுக்கு அந்த அரிய வாய்ப்பை வழங்குகின்றன.
நீங்கள் தொடங்க விரும்பிய பிசினஸ் ‘ஐ எங்கோ ஒருவர் வெற்றிகரமாக நடத்தி கொண்டிருக்கிறார் அவருடன் பங்குதாரராகி அந்த பிசினஸ் ‘இன் வளர்ச்சியில் நீங்களும் பங்குபெறுவதை விட ஒரு புத்திசாலித்தனம் இருக்கமுடியாது.
ICICI, HDFC போன்ற வங்கிகள் அல்லது TCS, Infosys போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் என்று எதிலும் முதலீடு செய்யும் வாய்ப்பை பங்குச்சந்தைகள் வழங்குகின்றன.

You may also like...