முக்காலா முக்காபுலா ஹவாலா
“ஹவாலா”, இந்த சொல்லை தமிழ் திரைப்படங்களில் நிறைய சொல்ல கேட்டிருக்கிறோம்.
உண்மையில் ஹவாலா என்றால் என்ன? எப்படி செயல்படுகிறது? மற்றும் ஏன் சட்டவிரோதமானது?
வாருங்கள், இந்த கேள்விகளுக்கு நாம் விடை தேடலாம்
ஹவாலா என்றால் என்ன?
“ஹவாலா” என்ற சொல்லுக்கு நம்பிக்கை என்று பொருள். இது நம்பிக்கையின் அடிப்படையில் பணம் அனுப்பும் முறையாகும்.
8 ஆம் நூற்றாண்டில் தெற்காசியாவில் ஹவாலா உருவானது. இன்று உலகம் முழுவதும், குறிப்பாக சில சமூகத்தில், நிதி பரிமாற்றங்களை மேற்கொள்வதற்கான மாற்று வழிமுறையாக ஹவாலா பயன்படுத்தப்படுகிறது.
வங்கி பரிமாற்றங்கள் போலன்றி, ஹவாலாவில் பணப்பரிமாற்றம் ஹவாலாதாரர்கள் அல்லது ஹவாலா டீலர்களின் நெட்வொர்க் மூலம் ஏற்பாடு செய்யப்படுகிறது.
மேற்கத்திய வங்கி நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பே ஹவாலா இந்தியாவில் நடைமுறையில் இருந்துள்ளது.
வங்கிகள் மற்றும் முறையான நிதி கட்டமைப்பிற்கு வெளியே செயல்படுவதால் இது சட்டத்திற்கு உட்பட்ட அமைப்பு அல்ல.
ஹவாலா எப்படி வேலை செய்கிறது?
ஒரு ஹவாலா பரிவர்த்தனையில், உண்மையில் பணம் கைமாற்றப்படுவதில்லை. ஹவாலா டீலர்கள் எனப்படும் ஆபரேட்டர்கள் நீங்கள் பணம் அனுப்பவேண்டிய நாட்டில் உள்ள ஹவாலா டீலரைத் தொடர்பு கொள்வார். உங்களிடம் இருந்து பணத்தை பெற்று கொண்டு அதற்கு நிகரான பணத்தை அந்த நாட்டில் உள்ள டீலரிடம் வாங்கி கொள்ள சொல்வார். உங்களுக்கு ஒரு சங்கேத குறியீடு கொடுக்கப்படும். வெளிநாட்டில் உள்ள உங்கள் நண்பர் அல்லது உறவினர் அந்த சங்கேத குறியீட்டை டீலரிடம் கூறி பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.
ஒரு உதாரணத்தின் மூலம் ஹவாலாவைப் புரிந்து கொள்ள முயல்வோம். ராமநாதபுரத்தை சேர்ந்த முனுசாமி துபாயில் பணிபுரிகிறார். அவர் இந்தியாவில் உள்ள தனது குடும்பத்திற்கு கொஞ்சம் பணம் அனுப்ப விரும்புகிறார். முனுசாமி அதிகம் படித்தவரல்ல. வங்கிக்கு சென்று பணம் அனுப்பினால் நிறைய பணம் செலவாகும் என்று நண்பர்கள் கூறுகின்றனர். வங்கி நடைமுறையும் அவருக்கு சிக்கல்லாய் தோன்றுகிறது. இறுதியாக முனுசாமி ஒரு ஹவாலா டீலர் ஐ தொடர்பு கொள்கிறார். அந்த டீலரும் நியாயமான கமிஷனில் பணத்தை அனுப்புவதாக உறுதியளிக்கிறார். முனுசாமி ஹவாலா ஆபரேட்டரிடம் பணத்தை ஒப்படைக்கிறார். ஹவாலா ஆபரேட்டர் இந்தியாவில் உள்ள தனது சக டீலரிடம் முனுசாமியின் குடும்பத்திற்கு பணத்தை கொடுக்குமாறு சொல்கிறார். முனுசாமியின் குடும்பத்தைச் சேர்ந்த எவரும் இப்போது இந்தியவில் அந்த ஹவாலா ஆபரேட்டரிடம் சங்கேத குறியீட்டை கூறி பணத்தைப் பெற்று கொள்ளலாம்.
இது போல் ஹவாலா மூலம் இந்தியாவில் இருந்தும் பணத்தை உலகின் எந்த மூலைக்கும் அனுப்பலாம்.
ஹவாலா சட்டவிரோதமா?
ஆம், இந்திய உட்பட பல நாடுகளில் ஹவாலா சட்டவிரோதமாக்கப்பட்டுள்ளது, ஏனெனில் இது பணமோசடியின் ஓர் அங்கமாக செயல்படுகிறது. முறையற்ற வழியில் சம்பாதித்த பணத்தை வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாக அனுப்ப ஹவாலா அனுமதிக்கிறது. வங்கிகள் மூலம் ஹவாலா பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படாததால், அவற்றை அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாது. மேலும் கண்டுபிடிப்பதும் கடினம்.
ஹவாலா கறுப்புப் பணத்தை புழக்கத்தில் விடவும், பயங்கரவாதம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு நிதி வழங்கவும் உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
மக்கள் ஏன் இன்னும் ஹவாலா பயன்படுத்துகிறார்கள்?
ஹவாலா பரிவர்த்தனைகள் சட்டவிரோதமானது என்றபோதிலும் பின்வரும் காரணங்களுக்காக மக்கள் இந்த முறையைப் பயன்படுத்துகின்றனர்:
- ஹவாலா மூலம் பணப் பரிமாற்றம் செய்வதற்கான கமிஷன் விகிதம் மிகவும் குறைவு
- எந்தவொரு அடையாளச் சான்று மற்றும் வருமான ஆதாரத்தை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை
- நம்பகமான மற்றும் வெகுவிரைவாக பணம் அனுப்பும் முறை
- வங்கிகளால் செய்யப்படும் பணவர்தனைகளுடன் ஒப்பிடும் போது இது எளிய மற்றும் தொந்தரவு இல்லாத செயல்முறை
- கணக்கில் காட்டப்படாத வருமானத்தை மாற்றுவதற்கான ஓர் எளிய வழி
அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் (1999) ஹவாலா பண பரிவர்த்தனைகளை முற்றிலும் தடை செய்துள்ளது .இந்த கட்டுரை ஹவாலா முறையை பயன்படுத்த பரிந்துரைக்கவில்லை. இது ஹவாலா குறித்த உங்கள் சேந்தேகங்களை களைவதற்கு மட்டுமே.