நிதி சுதந்திரம்
FIRE (நிதி சுதந்திரம், சீக்கிர ஓய்வு) என்பது நிதி சுதந்திரத்தை வெகுவாக அடைந்து முன்கூட்டியே ஓய்வு பெற்று தான் விரும்பிய வாழ்க்கையை வாழ்வதை இலக்காகக் கொண்ட ஒரு வாழ்க்கை முறை இயக்கமாகும். 1992 இல் விக்கி ராபின் மற்றும் ஜோ டோமிங்குஸ் எழுதிய “உங்கள் பணம் அல்லது உங்கள் வாழ்க்கை” என்ற புத்தகத்தில் இருந்து பின்பற்றப்படும் ஒரு நடைமுறையாகும்.
வருமானத்தை அதிகரிக்க அல்லது செலவினங்களைக் குறைப்பதற்கான வழிகளைக் கண்டறிவதன் மூலம் சேமிப்பு விகிதத்தை அதிகரிக்க முடியும், சேமிப்பு விகிதத்தை அதிகரிப்பதன் மூலம் உங்கள் ஓய்வு காலத்தை நீங்கள் சந்தோசமாக செலவிட முடியும். ஒருவரின் ஓய்வு ஆண்டுகளில் வாழ்க்கைச் செலவுகளுக்குப் போதுமான பணத்தை சேமிப்பதற்கு தேவையான வழிமுறையே FIRE.
சமீபத்திய ஆண்டுகளில், ஏராளமான புதிய தலைமுறை இளைஞர்கள் FIRE இயக்கத்தைத் தழுவுகின்றனர்.
சரி, சீக்கிர ஓய்வு பெற விரும்புகிறீர்கள் ஆனால் உங்களுக்கு ஓய்வு பெற எவ்வளவு பணம் தேவை? எந்த வயதில் ஓய்வு பெறலாம்? என்பதற்கு விடை கூறுகிறது FIRE எண்.
FIRE எண் என்பது ஓய்வு காலத்தின் எஞ்சிய ஆண்டுகள் வாழ்வதற்கும், பணத்திற்காக வேலை செய்வதை நிறுத்துவதற்கும் நீங்கள் முதலீடு செய்ய வேண்டிய தொகையாகும்.
இங்கு ஓய்வு என குறிப்படுவது வேலை செய்யமால் இருப்பதல்ல. உங்களுக்கு பிடித்த மனநிறைவான வேலையை செய்வது. அது விவசாயமாக இருக்கலாம் அல்லது புத்தகம் எழுதுவது, ஓவியம் வரைவது இப்படி எதுவாகவும் இருக்கலாம். நீங்கள் சிறு வயதில் ஆசைப்பட்ட அல்லது உங்களின் மனதின் மூலையில் ஒளிந்துள்ள ஏதோ ஒரு விருப்ப வேலை. பணத்திற்காக பாராமல் உங்களின் மனநிறைவிற்காக பார்க்கும் வேலை. வருமானத்தை பொருட்படுத்தாமல் உங்கள் மனஅமைதியை தரும் ஓர் வேலையை குறிப்பிடுகிறது.
ஏன் வேண்டும் நிதி சுதந்திரம்?
நினைத்து பாருங்கள் இப்படி ஒரு வாழ்க்கையை
- உங்களிடம் கிரெடிட் கார்டுகள் இல்லை
- உங்களிடம் கார் கடன் இல்லை
- உங்களிடம் வீட்டுக் கடன் இல்லை
- உங்களிடம் வேறு தனிப்பட்ட கடன்கள் இல்லை
- உங்களிடம் போதுமான அவசர கால நிதி உள்ளது
- உங்களிடம் ஓய்வு பெறுவதற்கு போதுமான சேமிப்பு உள்ளது
- உங்களால் விரும்பியதை வாங்க முடியும்
- உங்களால் விரும்பிய இடங்களுக்கு விரும்பிய நேரத்தில் பயணிக்க முடியும்
- உங்கள் வேலை நேரத்தை நீங்களே தீர்மானிக்கிறீர்கள் – திங்கட்கிழமைகளை பார்த்து பயம் இல்லை
- உங்கள் மனதுக்கு பிடித்த மனநிறைவுள்ள வேலையை செய்கிறீர்கள்.
இப்படி ஒரு வாழ்க்கை அனைவருக்கும் சுலபமாய் கிடைத்துவிடுவதில்லை. இப்படி ஒரு வாழ்க்கை வேண்டுமென்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும். இதற்கு FIRE விடைகூறுகிறது
எப்படி அடைவது?
- நாளைய வருமானத்தை செலவு செய்யாதீர்கள்.
- உங்கள் செலவினங்களைக் கண்காணிக்கவும். மாதாந்திர வரவு செலவு பட்டியலை உருவாக்கி அதை கடைபிடிக்கவும்.
- ஒவ்வொரு மாதமும் சேமிப்பது, செல்வத்தை உருவாக்குவதற்கான முதல் படியாகும்.
- உங்கள் வருமானத்தில் குறைந்தது 10% முதலீடு செய்யுங்கள். அதிக முதலீடு, விரைவான நிதி சுதந்திரம்.
- ரொக்கமாக பணம் கொடுத்து வாங்க முடியவில்லையென்றால், அதை வாங்க வேண்டாம்.
- உங்கள் கடனை முதலில் அடைக்கவும்.
- கிரெடிட் கார்டு தேவையற்ற பொருளை வாங்க செய்யும்!
- பெரிய கடன்களில் விழுந்து வங்கிக்காக வேலை செய்யாதீர்கள்.
- பணத்தை முதலீடு செய்யுங்கள், வங்கி உங்களுக்காக வேலை செய்யும்.
- குறைந்தபட்சம் 6 மாதங்களை சமாளிப்பதற்கு அவசர நிதியை உருவாக்குங்கள்.
- போதுமான ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீடு வேண்டும்
- 47 விதியை பின்பற்றுங்கள் (ஒரு வாரத்தில் மற்றவர்களுக்கு 40 மணிநேரமும் உங்களுக்காக 7 மணிநேரமும் வேலை செய்யுங்கள்)
- ஒவ்வொரு பைசாவும் முக்கியமானது – சிக்கனமாக செலவு செய்யுங்கள்
- உங்கள் சம்பளம் உங்களை பணக்காரர் ஆக்காது ஆனால் உங்கள் செலவு செய்யும் பழக்கம் உங்களை பணக்காரர் ஆக்கும்.
- உங்களுக்கு தேவை பணப்புழக்கம், பணம் அல்ல
- ஒன்றுக்கு மேற்பட்ட வருமான ஆதாரங்களை உருவாக்குங்கள்.
- குறுகிய காலத்திற்கு உங்கள் நிதி இலக்குகளை அமைக்கவும் ஆனால் பல தசாப்தங்களில் சிந்திக்க உங்கள் மூளைக்கு பயிற்சி அளியுங்கள்.
- கூட்டு வட்டி என்பது உலகின் எட்டாவது அதிசயம் – உங்கள் செல்வம் மெதுவாக வளர்வதைப் பாருங்கள்! குறுக்குவழியில் பணம் சேர்க்க முயலாதீர்கள்.
முதல் 1 கோடி சேர்ப்பது கடினம், ஆனால் அந்த மைல்கல்லை அடைந்தவுடன். பணம் சம்பாதிப்பது சுலபம் என்று உணர்வீர்கள்.(உங்கள் பணமே உங்களுக்காக உழைக்கும்). 1 கோடியில் 10% என்பது 10 லட்சம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தோராயமாக மாதம் 83000 ரூபாய் வட்டி மட்டுமே கிடைக்கும். - நீங்கள் சம்பாதிப்பதற்கும் செலவு செய்வதற்கும் உள்ள வித்தியாசம் உங்கள் FIRE எண்ணைத் தீர்மானிக்கும்.