பணம் – சில தவறான ஆலோசனைகள்

நம்மில் பெரும்பாலோர் சேமிப்பதில்லை. சேமிக்கும் சிலரும் உற்றாரின் ஆலோசனைகளை கண்மூடித்தனமாகப் பின்பற்றுகிறார்கள். ஆனால் எல்லா ஆலோசனைகளும் உண்மையில் நல்லவைகள் தானா?.

பணம் குறித்த சில தவறான ஆலோசனைகளையும் அவற்றின் நிஜங்களையும் கீழே காணலாம்.

ஆலோசனை 1:

சேமிப்பு உங்களை பணக்காரர் ஆக்கும்

நிஜம்:
நமக்கு தெரிந்த சிறந்த சேமிப்பு வங்கிகள் வழங்கும் FD எனப்படும் நிரந்தர வைப்பு நிதி – நமது பணம் பாதுக்காப்பாகவும் அதே நேரம் குறைந்த பட்ச வட்டியும் கிடைக்கும். நமது பணம் பெரும்பாலும் வங்கி FD – யிலேயே உறங்குகிறது.


ஏனெனில் FD விகிதம் தற்போது 5% ஆகவும், நுகர்வோர் பணவீக்கம் 6% ஆகவும் இருப்பதால், நமது பணத்தின் வாங்கும் சக்தி கொஞ்சம் கொஞ்சமாக குறைகிறது. உங்கள் சேமிப்பு, பணவீக்கத்தை தாண்டிய வருமானத்தை தரவேண்டும்.
எனவே, சேமிப்புக் கணக்கிற்கு அப்பால் சென்று, உங்கள் இலக்குகள் மற்றும் தேவைகளுடன் ஒத்துப்போகும் முதலீட்டு திட்டங்களை பரிசீலிப்பது அவசியம்.

ஆலோசனை 2:

40 வயதிற்கு முன் ஓய்வை பற்றி யோசிக்க தேவையில்லை

நிஜம்:
நம்மில் பெரும்பாலோர் ஐம்பது வயதிலும் ஓய்வு காலத்தை பற்றி யோசிப்பதில்லை என்பது வேதனையான விஷயம். பிள்ளைகளை ஓய்வு கால முதலீடாக பார்க்கிறோம். வயதான காலத்தில் பிள்ளைகளையும் கஷ்டப்படுத்தி நாமும் கஷ்டப்படுகிறோம்.
ஓய்வு காலத்தை முன்பே திட்டமிடுங்கள்,அடுத்தவர்களை சாராமல் உங்கள் தேவைகளை நீங்களே பூர்த்தி செய்து கொள்ளும் நிதி நிலையை உருவாக்குங்கள். உங்களுக்குத் தேவையானவற்றை மட்டுமல்ல, உங்கள் கனவுகளை நனவாக்கும் அனைத்தும் – அது ஒரு கனவு இல்லமாகவோ, உங்கள் குழந்தைகளுக்கான சிறந்த கல்வியாகவோ அல்லது விரும்பப்படும் காராகவோ இருக்கலாம். முடிந்தவரை சீக்கிரமே உங்கள் தேவைகளை பட்டியலிட்டு முதலீட்டை தொடங்குங்கள்.
உதாரணமாக, 20 வயதிலிருந்து ஆறு சதவீத வருமானத்தில் மாதம் 5,000 ரூபாயை முதலீடு செய்ய முடிவு செய்தால், அது 60 வயதில் 5 கோடி ரூபாயாக மாறும். மறுபுறம் 40 வயதிலிருந்து நீங்கள் மாதத்திற்கு 10,000 ரூபாய் சேமித்தாலும் கூட 60 வயதில் உங்கள் கையில் 4 கோடி ரூபாய் மட்டுமே இருக்கும்.

நீங்கள் எவ்வளவு முன்னதாக முதலீடு செய்யத் தொடங்குகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக உங்கள் பணம் உங்களுக்காக உழைக்கும். பணம் குட்டி போட கால அவகாசம் தேவை.

ஆலோசனை 3:

முதலீடு செய்ய நிறைய பணம் தேவை
என்னிடம் நிறைய பணம் இருக்கும்போது முதலீடு செய்யத் தொடங்குவேன்.

நிஜம்:
எவ்வளவு பணம் இருந்தால் உங்கள் முதலீட்டை தொடங்கலாம் என்று நினைக்கிறீர்கள்?

10,000 ரூபாய்
1,00,000 ரூபாய்
10,00,000 ரூபாய்

முதலீட்டிற்கு பெரும் தொகை தேவை என்ற தவறான எண்ணம் பலருக்கு உள்ளது. உங்கள் முதலீட்டை தங்கத்தில் தொடங்க தோராயமாக 4500 ரூபாய் போதும். அவ்வளவு பணத்திற்கு எங்கே போவது என்று யோசிகிறீர்களா? 100 ரூபாய் முதலீட்டை ஏற்கும் திட்டங்கள் பல உள்ளன. ஆகவே இன்றைய தொடங்குங்கள். முதலீட்டுக்கு நிறைய பணம் ஒன்றும் தேவையில்லை.

ஆலோசனை 4:

முதலீடுகள் ஆபத்தானது
முதலீடுகள் ஆபத்தானவை. உங்கள் பணத்தை நீங்கள் இழப்பீர்கள்.

நிஜம்:
ஒரு சில நிகழ்வுகளை வைத்து முதலீடுகள் ஆபத்தானவை என்று நினைக்கிறோம். ஆபத்து அனைத்திலும் இருக்கிறது. ஏன் நாம் தினமும் வெளியில் சென்று வீடு திரும்புவதே ஒரு வகையில் ரிஸ்க் தான்.

இதேபோல், நமது பணம் கடினமாக உழைக்க வேண்டுமெனில் – ரிஸ்க் என்ன, ரிஸ்க்கு-டன் இணைக்கப்பட்ட வெகுமதி என்ன என்பதைப் புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும், அதனை பொறுத்து நம் முதலீட்டை கட்டமைக்க வேண்டும்.
சரியான வாய்ப்புகளைக் கண்டுபிடிப்பதில் உதவ வல்லுநர்கள் இருக்கிறார்கள். அவர்களின் உதவியை நாடலாம். அவர்கள் உங்கள் ரிஸ்க் திறனை பொறுத்து உங்கள் முதலீட்டை வடிவமைப்பார்கள்.
முதலீட்டின் அபாயத்தைக் குறைக்க, உங்கள் பணத்தை பல வழிகளில் முதலீடு செய்யலாம். – ரியல் எஸ்டேட், தங்கம், பங்குச்சந்தை என்று உங்கள் முதலீட்டை விஸ்தரியுங்கள்.

ஆலோசனைகள் இலவசமானவை, யாரும் கூறலாம். இன்னார் தான் கூறவேண்டுமென்ற வரையறை ஏதுமில்லை. ஜெயித்தவரும் கூறலாம், தோற்றவரும் கூறலாம்.
ஆலோசனைகளின் நிஜங்களை அறிவது அவசியம்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

You may also like...