மகத்தான மருத்துவ காப்பீடு
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
ஆரோக்கியத்தை என்றும் நாம் செல்வத்தோடு ஒப்பிடுவோம். மிக பெரிய செல்வந்தனாய் இருந்தாலும் ஆரோக்கியம் இல்லையேல் அவனும் ஏழையே.
நோய் காரணமாக ஒரு நபரின் மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை செலவுகளை ஏற்றுக்கொள்ளும் காப்பீடு – மருத்துவக் காப்பீடாகும் . மருந்துகள், மருத்துவ ஆலோசனை கட்டணங்கள், மருத்துவமனை சார்ந்த பிற செலவுகள் அனைத்தும் மருத்துவக் காப்பீட்டில் சேர்க்கப்படுகின்றன
எதிர்பாரா சூழ்நிலையில் நோயினால் ஏற்படும் பணத்தேவையை சமாளிக்க மருத்துவ காப்பீடுகள் உதவாவுகின்றன.
மருத்துவ காப்பீட்டின் முக்கியத்துவம் என்ன என்பதை கீழே காணலாம்
1. உங்கள் சேமிப்பைப் பாதுகாக்க
எதிர்பாராத நோய் மன உளைச்சல் மற்றும் மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும் அதே வேளையில், அவசர பணத்தேவை உங்களை மேலும் அழுத்தும் – மருத்துவச் செலவுகள் எதிர்பாராதவை, உங்களால் அந்த வேலையில் அந்த பணத்தை புரட்ட உங்கள் சேமிப்பை அல்லது சொத்துக்களை இழக்க வேண்டியிருக்கும்.
2. உங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய
இளமை காலத்தில் உடல்நலக் காப்பீட்டைத் தேர்ந்தெடுப்பது பல நன்மைகளைக் கொண்டுள்ளது. நீங்கள் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதால், குறைந்த கட்டணத்தில் காப்பீட்டு திட்டங்களைப் பெறலாம், மேலும் நீங்கள் வயதாகும்போதும் இந்த நன்மைகள் தொடரும்.
அதே வேலையில் நீங்கள் நாற்பது வயதை தாண்டிய பிறகு காப்பீடு எடுத்தால் பிரீமியம் தொகை அதிகமாக செலுத்த வேண்டிவரும்.
3. வாழ்க்கை முறை நோய்களை எதிர்த்து போராட
குறிப்பாக 45 வயதிற்குட்பட்டவர்களிடையே வாழ்க்கை முறை நோய்கள் அதிகரித்து வருகின்றன. வயதான தலைமுறையினரிடையே பரவலாக இருக்கும் நோய்கள், இப்போது இளையவர்களிடமும் அதிகமாக உள்ளது. அமர்ந்து கொன்டே செய்யும் வேலை, மன அழுத்தம், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் ஒழுக்கமற்ற வாழ்க்கை முறை போன்ற காரணிகள் இந்நோய்களுக்கு வழி வகுக்கும்.
4. உங்கள் குடும்பத்தைப் பாதுகாக்க
ஒரு சிறந்த உடல்நலக் காப்பீட்டுத் திட்டத்தைத் தேடும் போது, தனி பாலிசிகளை வாங்குவதை விட, உங்கள் முழு குடும்பத்தையும் ஒரே பாலிசியின் கீழ் பாதுகாக்கும் ஒரு பாலிசியை நீங்கள் தேர்வு செய்யலாம். நோய்களால் பாதிக்கப்படக்கூடிய உங்கள் வயதான பெற்றோரையும், சார்ந்திருக்கும் குழந்தைகளையும் கருத்தில் கொள்ளுங்கள்.
5. போதிய காப்பீட்டுத் தொகை
5 லட்ச ரூபாய்க்கான ஹெல்த் இன்ஷூரன்ஸ் ஃப்ளோட்டர் பாலிசி சமீப காலம் வரை போதுமானதாகக் கருதப்பட்டது. இருப்பினும், அதிகரித்து வரும் மருத்துவச் செலவுகள் நம்மை அதிக காப்பீடுகளைத் தேர்ந்தெடுக்கத் தூண்டுகிறது. ஆகையால் குறைந்தது 20-25 லட்சம் பாலிசி பெருநகரங்களில் உள்ள சிறந்த மருத்துவமனைகளில் சிகிச்சை பெற போதுமானதாக இருக்கும்.
6. மருத்துவ பணவீக்கத்தை சமாளிக்க
மருத்துவத் தொழில்நுட்பம் மேம்பட்டு, நோய்கள் அதிகரிக்கும்போது, சிகிச்சைக்கான செலவும் அதிகரிக்கிறது. மேலும் மருத்துவச் செலவுகள் மருத்துவமனைகளுக்கு மட்டும் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மருத்துவரின் ஆலோசனை, நோயறிதல் சோதனைகள், ஆம்புலன்ஸ் கட்டணம், ஆபரேஷன் தியேட்டர் செலவுகள், மருந்துகள், அறை வாடகை போன்றவற்றுக்கான செலவுகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. நீங்கள் போதுமான அளவு தயாராக இல்லை என்றால் இவை அனைத்தும் உங்கள் நிதியில் கணிசமான அழுத்தத்தை ஏற்படுத்தலாம்