பணத்துடன் ஒரு பயணம்
பயணங்கள் என்றுமே சுவாரசியமானவை. உங்களுடன் பயணிக்கும் நண்பர்களை பொறுத்து பயண அனுபவங்கள் மாறுபடும். நண்பர்கள் மட்டுமல்ல, பணத்தை பொருத்தும் உங்கள் பயண அனுபவங்கள் மாறுபடும்.
நல்ல நண்பன் நல்ல பயணம்.
பணம் பயணங்களுக்கு அவசியம். பணமில்லா பயணங்கள் அழகாய் இருப்பதில்லை.
வாழ்க்கை என்ற பெரும் பயணத்தில் பெரும்பாலும் பணத்துடனே பயணிக்கிறோம்.
நினைவறிய வயதில் பணத்துடன் தொடங்கியது என் முதல் பயணம். நடுத்தர வருமானம் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். முதுகலைப் படிப்பிற்குப் பிறகு எல்லோரையும் போல் வேலைக்காக சென்னை வந்தேன்.
பெருநகரம், சுறுசுறுப்பான மனிதர்கள். இங்கு எல்லோரும் எங்கோ, எதனை நோக்கியோ ஓடிக்கொன்டே இருக்கிறார்கள். இவர்களை போல் நானும் ஓட வேண்டும் என்று நினைக்கையில் தலை சுற்றியது. இம்மனிதர்களின் ஓட்டங்கங்களுக்கும் பின் தேவைகள் உள்ளது. அத்தேவைகளின் பின் ஏதோவொரு வகையில் பணம் உள்ளது. ஒருவகையில் இந்த ஓட்டம் பணத் தேடலின் சிறு பயணம் தான்.
நீண்ட நெடிய போராட்டங்களுக்குப் பிறகு ஒரு சிறிய நிறுவனத்தில் வேலை கிடைத்தது. 5000 ரூபாய் முதல் சம்பளம். அத்துடன் தொடங்கியது பணத்துடனான எனது முதல் பயணம்.
சில வருடங்களில் ஒரு பெருநிறுவனத்தில் வேலை கிடைத்தது, கண்ணை முடி திறப்பதுற்குள் திருமணம் செய்து, குழந்தைகளைப் பெற்று, கடனில் வீடும் வாங்கினேன்.
பணமும் வருவதும் போவதுமாய் இருந்தது. வாங்கிய சம்பளம் அனைத்திற்கும் செலவுகள் வைத்திருந்தேன். சில மாதங்களில் சம்பளத்தை விட அதிகமாய் செலவுகள்.
பத்தாம் தேதிக்கு பின் வாழ்க்கை வெறுப்பாய் தோன்றும். ஆயிரம் ரூபாயுடன் மாதத்தை கடப்பது அந்தரத்தில் கம்பியில் நடப்பதை போன்றது. எதிர்பாரா செலவுகள் வந்தால் இன்னும் திண்டாட்டம் தான். நீண்டு கொன்டே செல்லும் அந்த மாதங்கள் கொடியவை.
ஓய்வின்றி உழைக்கிறேன், நல்ல சம்பளம் தான்! இருந்தும் என்னிடம் சேமிப்பு என்றெதுவும் இல்லை, ஆனால் கடன்கள்! நிறையவே உள்ளது.
ஒரு மாதம் கூட சம்பளம் இல்லாமல் என்னால் தாக்கு பிடிக்க முடியாது. நிச்சயமற்ற உலகில் சம்பளத்தை மட்டுமே நம்பி வாழ்வது எவ்வளவு அபத்தம். குறைந்தது ஆறு மாதங்களாவது சம்பளமின்றி வாழமுடியாவிடில், நான் எவ்வளவு சம்பாதித்தும் என்ன பயன்? நண்பர்களை விசாரித்தேன், அவர்களுக்கும் ஏறக்குறைய இதே நிலைதான்.
சிலர் என்னைப் போல் வீடு வாங்கி, கடன் வலையில் விழுந்தனர்.
சிலர் பாதுகாப்பான முதலீடு என்று ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்துள்ளனர்.
நல்ல சம்பாதித்தாலும், எதிர்காலத்தைப் பற்றி யோசிக்காமல், வருங்கால வருமானத்தை செலவு செய்யும் பழக்கம் நம் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகிறது.
இந்த சம்பளம் எப்போதும் வரும் என்று நம்புகிறோம். பொருளாதார சூழலில் வேலை இழக்கும் பட்சத்தில் நிற்கதியற்று நிற்கிறோம்.
சேமிப்பு பற்றி போதுமான புரிதலில்லை. “வாழ்க்கை வாழ்வதற்க்கே” என்ற நிலைப்பாட்டில் நிகழ்காலத்தை அனுபவித்து வருங்காலத்தை இழந்தேன்.
பணக்காரனாவது இருக்கட்டும்! குறைந்தது சேமிக்காமல் நான் இழந்த ஆண்டுகளை திரும்பப் பெற வேண்டும்.
எப்படி திரும்பப் பெறுவது? உண்மையில் எனக்கு தெரியாது.
திரில்லர், துப்பறியும் புத்தகங்கள் மட்டுமே வசித்து கொண்டிருந்த எனக்கு ராபர்ட் கியோசகியின் Rich Dad Poor Dad புத்தகம், பணம் குறித்த எனது பார்வையை மாற்றியது. நிதி கல்வியறிவின் அவசியம் உணர்த்தியது.
நிதி கல்வியறிவு – பள்ளியில் கற்பிக்கப்பட வேண்டிய பாடமாக இருக்க வேண்டும்.
பணம் சம்பாதிப்பதில் காட்டும் ஆர்வம் ஏனோ அதை கையாள்வதில் இருப்பதில்லை – கடன் வாங்கி செலவு செய்வதில் தயக்கம் எதுவும் காட்டுவதில்லை. ஏனேனில் நமக்கு கடன் கொடுக்க ஆயிரம் நிறுவனங்கள் முன் வருகின்றன.
8 மணி நேரம் வேலை செய்து நிச்சயம் நம்மால் பணக்காரனாக முடியாது. ஏன் 16 மணி நேரம் வேலை செய்தாலும் முடியாது.
பணக்காரனாவது – நம் உழைப்பில் இல்லை அது நம் மனதில் உள்ளது.
ஆட்டு பண்ணை தொடங்க நினைக்கிறீர்கள். இரண்டு ஆடுகள் முதலில் வாங்குகிறீர்கள், நாளடைவில் அது நான்கு ஆடுகள் ஆகிறது. சில வருடங்களில் இருபது முப்பது ஆடுகள் ஆகிறது. அது போல் தான் பணமும், உங்களால் முடிந்ததை முதலில் சேமியுங்கள், சேமிப்பதை பேணுங்கள், பணம் குட்டி போட போதுமான அவகாசம் கொடுங்கள். பணம் நிறைய குட்டி போடட்டும். இங்கு முதலீடு என்பதை தீவனங்களுடன் ஒப்பிடலாம். நல்ல தீவனங்கள் நல்ல ஆரோக்கியமான வளச்சியை கொடுக்கும்.
முதலீடு என்று சொன்னால் முதலில் நமக்கு நினைவுக்கு வருவது ரியல் எஸ்டேட்.
“ஒரு லட்ச ரூபாய்க்கு வாங்கினேன் இப்போது 25 லட்ச ரூபாய்க்கு போகிறது” – இத்தகைய கதைகளை நீங்களும் கேட்டு ஆசைகொண்டு சென்னைக்கு மிக அருகில் நிலங்கள் வாங்கியிருக்க கூடும்.
நிலத்தை அடுத்து தங்கம். ஆபரண பயன்பாட்டை விடுத்து தங்கத்தை முதலீடாக பார்க்கும் வழக்கம் நம் சமூகத்தில் உண்டு.
எத்தகைய முதலீடு என்றாலும். அதற்குரிய சாதக பாதக அம்சங்கள் உள்ளன.
பங்குசந்தையும் ஒரு முதலீடு தான் – எனக்கு பங்குச்சந்தை எப்போதும் கவர்ச்சிகரமானது.
யாரோ கூறிய அறிவுரையில் முதலீடு செய்து தோல்வி அடைந்திருக்கிறேன் அப்போதெல்லாம் பங்குச்சந்தை வெறும் சூதாட்ட கூடம் என்று கூட கருத்தியதுண்டு. ஏனெனில் பங்குசந்தை எப்படி வேலை செய்கிறது என்று நான் அறிந்திருக்கவில்லை.
நிலமோ, தங்கமோ, பங்குசந்தையோ போதிய ஆராய்ச்சியின்றி முதலீடு செய்யும் எதுவுமே சூதாட்டம் தான்.
இந்த பயணத்தில், இப்போது நான் பணக்காரன் ஆக விரும்பவில்லை மாறாக நிதி சுதந்திரத்தை விரும்புகிறேன். பணக்காரர்களிடமுள்ள ஒன்று நம்மிடையே இல்லையென்றால் அது நிதி சுதந்திரம் தான்.
நிதி சுதந்திரத்தை அடைய நமக்கு தேவை ஒரு இலக்கு அதனை நோக்கிய ஒரு பயணம். இப்பயணத்தை “நெருப்பு பயணம்” என்று அழைக்கலாம். ஆங்கிலத்தில் FIRE Journey என்கின்றனர். தப்பான மொழிபெயர்ப்பாக தோன்றினாலும்.
நினைத்து பாருங்கள் நம்மூர் கோவில்களில் நடத்தப்படும் தீ மிதி திருவிழா போன்றது தான் இதுவும். போதிய விரதங்களுடன் நெருப்பை மிதித்து அந்த பக்கம் சென்றால் இறைவனை தரிசிக்கிலாம்.
அது போல் தான் போதிய ஒழுக்கத்துடன் செலவுகளை குறைத்து முதலீடுகளை அதிகரித்து அப்பக்கம் சென்றால் நிதி சுதந்திரத்தை தரிசிக்கலாம்.