நிதி கல்வியறிவு நமக்கு ஏன் அவசியம்?

FinTech-preview

130 கோடி இந்திய மக்கள் தொகையில் 76 சதவீதம் பேர் அடிப்படை நிதிக் கருத்துக்களைக் கூட அறிந்திருக்கவில்லை என்ற தரவு உங்களுக்கு ஆச்சரியத்தை தரலாம். நிதி கல்வியறிவு தனிநபர்களின் வளர்ச்சிக்கு மட்டுமின்றி நாட்டின் வளர்ச்சிக்கும் உதவும். நாட்டில் நிதியறிவு பெற்றவர்கள் அதிகம் இருந்தால் முதலீட்டின் அளவு அதிகரிக்கும், அதன் மூலம் தேசம் வளர்ச்சியடையும்.

அமெரிக்க கடன் சங்கத்தால்,1908 ஆம் ஆண்டு நிதி கல்வியறிவு அமெரிக்காவில் தொடங்கப்பட்டது. 1957 ஆம் ஆண்டில், நிதிக் கல்வியை நெவாடா மாநிலம் கட்டாயமாக்கியது, பின்னர் பிற மாநிலங்கள் அதனை பின்பற்றின. ஆஸ்திரேலியாவும் தனி நிதி கல்வியறிவு பாடத்திட்டங்களை வழங்குகிறது. சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியா ஆகிய ஆசிய நாடுகள் இந்த முயற்சியைத் தற்போது தொடங்கி உள்ளன.

கோவிட்-19 பெருந்தொற்று கோடி கணக்கான உயிர்களை ஆபத்தில் ஆழ்த்தியது. பலரை வேலை இழப்புகள் அல்லது பெரும் நிதி நெருக்கடியில் தள்ளியுள்ளது. அனைவரையும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மட்டுமல்ல, நிதி ரீதியாகவும் பாதித்தது இந்த பெருந்தொற்று. போதிய சேமிப்பின்றி அவதிப்பட்டோர் பலர். முதலீடு அல்லது சேமிப்பின் முக்கியத்துவத்தை நம்மிடம் பாராபட்சம் இல்லாமல் உணர்த்தியது இந்த பெருந்தொற்று.

அடிப்படை நிதி கல்வியறிவு நம்மிடையே இல்லாததால் சேமிப்பு மற்றும் முதலீடு தொடர்பான போதிய விழிப்புணர்வு நம்மிடையே இல்லை. சம்பளம் சார்ந்த நம் வாழ்வில், ஒரு மாதம் சம்பளம் வரவில்லையென்றால் நம்மில் பலரின் வாழ்க்கை தலைகீழ் தான். நிதி அறிவு செல்வத்தை கட்டியெழுப்ப உதவுவது மட்டுமல்லாமல், அவசர காலங்களில் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கும்.

நிதி கல்வியறிவு என்பது நிதி வளர்ச்சி மற்றும் அதனை சார்ந்த வெற்றிகளை அடைய உதவும் ஒரு முக்கியமான திறனாகும். பட்ஜெட் போடுதல், கடனை நிர்வகித்தல், சேமிப்பு மற்றும் முதலீடு செய்தல் போன்றவைகள் அதில் அடங்கும்.

பலரும் சேமிப்பு, முதலீடு, காப்பீடு அல்லது அவசர நிதி இவையெல்லாம் பணக்காரர்களுக்கு ஆனது என்று எண்ணுகின்றனர். இது சரியல்ல, நிதி அறிவு அனைவருக்கும் பொதுவானது. நிதி அறிவே உங்கள் வாழ்வை உயர்த்தும்.

சில அடிப்படை கோட்பாடுகளை கீழே காணலாம்

கடன்: கடன் என்பது அடிப்படையில் உங்களுடையது அல்லாத பணத்தை செலவழிப்பதாகும். கடன்களை இருவகையாக பிரிக்கலாம்.

1. நல்ல கடன்கள் – உதாரணத்திற்கு வீட்டு கடன். நீங்கள் ஒரு சொத்தை வாங்க கடன் வாங்குகிறீர்கள். காலப்போக்கில் உங்கள் வீட்டின் மதிப்பு அதிகரிக்கவே செய்யும். உங்கள் வாடகை மிச்சம் ஆகும்.

2. கெட்ட கடன்கள் – கார் வாங்குவது, காரின் மதிப்பு நாளடைவில் தேய்வடையும். நீங்கள் 10 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கிய கார் 5 வருடம் கழித்து 4 லட்சம் ரூபாய் மதிப்பிற்கும். அதற்கு வட்டியுடன் சேர்த்து தோராயமாக 12.5 லட்சம் செலுத்தியிருப்பீர்கள். நிகர நஷ்டம் 8.5 லட்ச ரூபாய்.
தேவையில்லாத விஷயங்களுக்கு கடன் வாங்குவதை தவிர்க்கலாம். அதற்காக கார் வாங்க வேண்டாமென்று சொல்லவில்லை, முடிந்தவரை பணம் சேர்த்து ரொக்கமாக வாங்குங்கள்.

பட்ஜெட்: நிதி கல்வியறிவு பெறுவதற்கான மிக முக்கிய வழி, நீங்கள் வாழ்வதற்கு தேவையான பட்ஜெட்டைப் புரிந்துகொள்வதாகும், இது உங்கள் நிதி சுதந்திரத்தை அடைவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பட்ஜெட்டுக்கான எளிய விதி என்னவென்றால், வருமானத்தை விட செலவுகள் குறைவாக இருக்க வேண்டும்.

சேமிப்பு: சேமிப்பு என்பது நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் பாதுகாப்பதாகும். சேமிப்பது உங்கள் செலவினங்களைக் கட்டுக்குள் வைத்திருக்க ஒரு வழியாகும். சேமிப்பு என்பது முதலீடு அல்ல. உங்கள் பணத்தை சேமித்தால் அது ஒருபோதும் வளராது.

முதலீடு: எதிர்காலத்திற்கான செல்வத்தை உருவாக்கவும், வளர்க்கவும் முதலீடு உங்களுக்கு உதவும். நீங்கள் தூங்கும் போதும் உங்கள முதலீடு உங்களுக்குகாக வேலை செய்யும். முதலீடு உங்கள் நிதி இலக்குகளை அடைவதற்கான ஓர் நுழைவாயில்.

காப்பீடு: நம் பணத்தை விரயமாக்கும் செயல் என்று கருதுகின்றனர். பின் ஒரு நாளில் கொடிய நோயில் அகப்படும்போது, சேர்த்து வைத்த பணம் அனைத்தையும் இழந்து கஷ்டப்படுகின்றனர்.

MLM: பொன்சி(Ponzi) என்று அழைக்கப்படும் இவ்வகை திட்டங்களில் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு மக்கள் ஏமாறுகின்றனர். பொன்சி திட்டங்கள் வேறுவேறு பெயரில் இன்றும் நடைமுறையில் உள்ளன. நீங்கள் அறிந்திராத தொழிலில் முதலீடு செய்தால் அது சூதாட்டத்திற்கு சமமானது.

இலவசங்கள்: முதலீடு பற்றிய அறிவுரைகளை கூட இலவசமாக எதிர்பார்போம். WhatsApp ல் வந்த செய்தியை வைத்து லட்சங்களை முதலீடு செய்வோம். பின் ஒருநாளில் அனைத்தையும் இழந்து நிற்போம். இலவசங்கள் உங்களுக்காக விரிக்கப்பட்ட தூண்டில். (There’s no such thing as a free lunch)

பணவீக்க விகிதம்: நம்மில் பலருக்கும் தெரிந்திருக்காது, தெரிந்திருந்தாலும் அது யாருக்கோ என்று ஒதுங்கி சென்றிருப்போம். உண்மையில் நம் பணத்தை விழுங்கும் ஒன்றை பற்றி கொஞ்சமேனும் தெரிந்திருக்க வேண்டாமா? நீங்கள் எவ்வளவு சேமித்தாலும் உங்களால் ஏன் பணக்காரராக முடியவில்லை என்று யோசித்திருக்கிறீர்களா? உங்களை தடுப்பது எது?

வருமான வரி – உங்களில் பெரும்பாலோர் வரி செலுத்தியிருப்பிர்கள். அரசாங்கம் இயங்க வரி அவசியம். வரி செலுத்துவது ஒன்றும் தவறல்ல, அது நம் கடமை.  ஆனால் அரசாங்கம் தரும் நியாயமான சலுகைகள் கூட தெரியாமல் கூடுதலாய் வரி செலுத்துவோர் எத்தனை பேர்.

நிதி கல்வியறிவு என்பது அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டிய மிக அடிப்படையான மற்றும் முக்கியமான திறன் ஆகும்.
உங்களை பணக்காரர் ஆக்குவதும் ஏழையாய் ஆக்குவதும் நிதி அறிவேயின்றி நீங்கள் சம்பாதிக்கும் பணம் அல்ல.

You may also like...