2022 புத்தாண்டில் உங்களுக்கான பண சேமிப்பு சவால்கள்
பணத்தைச் சேமிக்கும் சவால்கள் ஆன்லைனில் நிறைய உள்ளன. Pinterest, Facebook மற்றும் தனிப்பட்ட வலைப்பதிவுகள் வரை எல்லா இடங்களிலும் இச்சவால்களை நீங்கள் காணலாம். ஆக்கப்பூர்வமான வழிகளில் சிக்கனத்தை கடைபிடிப்பதன் மூலம் செலவாளிகளை கூட சேமிப்பாளர்களாக மாற்றலாம்.
நீங்கள் ஒரு வாரத்திற்கு 100 ரூபாய் சேமிப்பதை இலக்காகக் கொண்டால், ஆண்டின் இறுதியில் உங்களிடம் 5200 ரூபாய் இருக்கும்.
ஒவ்வொரு வாரமும் 100 ரூபாயை ஒதுக்கி வைப்பது என்பது ஒருவரால் செய்யக்கூடிய மிக எளிதான சவாலாகும். ஆனால் பலர் அதைச் செய்வதில்லை, பெரும்பாலான இந்தியர்களிடம் 100 ரூபாய் கூட அவசரத்திற்காக இல்லை என்பதே எதார்த்தம்.
நீங்கள் இதுவரை பணத்தைச் சேமிக்கவில்லை என்றால் இந்த புத்தாண்டில் அதனை தொடங்குங்கள். இந்த சவால்கள் உங்களை ஊக்குவிக்கட்டும்.
பணத்தைச் சேமிக்கத் தொடங்குவதைத் தடுக்கும் முதல் பிரச்சனை, சேமிப்பதற்கான பணத்தை எங்கு இருந்து எடுப்பது அல்லது எங்கு ஆரம்பிப்பது என்பதை அறியாதது. இதனால் பலர் தங்களால் ஒருபோதும் சேமிக்க முடியாது என்று எண்ணுகின்றனர்.
தற்போதைய செலவினங்களை மாற்றுவதன் அல்லது குறைப்பதன் மூலம் அந்த பணத்தை உங்களால் கண்டறிய முடியும்.
சவால்களுக்கு வருவோம்
52-வார சேமிப்பு சவால்
வாரத்திற்கு 100, 200 அல்லது 500 ரூபாய் சேமிக்கப் போகிறோம் என்று முடிவு செய்யுங்கள். இந்த தொகை இல்லாமல் அந்த வாரத்தை சமாளிக்கக்கூடிய ஒரு தொகையாக இருக்க வேண்டும், மேலும் அர்த்தமுள்ள ஒன்றாகவும் இருக்க வேண்டும். 10 ரூபாய் சேர்த்து பெரிய பிரயோஜனம் இருக்கப்போவதில்லை.
நீங்கள் வாரத்திற்கு 100 ரூபாய் சேமித்தால், ஆண்டின் இறுதியில் 5,200 இருக்கும்.
அதுவே நீங்கள் ஒரு வாரத்திற்கு 1000 ரூபாய் சேமிக்க முடிந்தால், ஆண்டின் இறுதியில் 52,000 ரூபாய் உங்களிடம் இருக்கும், இது விடுமுறை அல்லது வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க அல்லது அவசரகால நிதியாக உங்களுக்கு உதவ கூடும்.
52 வார சேமிப்பு சவாலில் நீங்கள் ஆக்கப்பூர்வமாகவும் இருக்கலாம். உதாரணத்திற்கு சிலர் முதல் வாரத்தில் வாரம் 50 ரூபாய், இரண்டாவது வாரம் 100 ரூபாய், மூன்றாவது வாரம் 150 ரூபாய், மற்றும் 52வது வாரத்தில் 2,600 ரூபாய் சேமிப்பார்கள். அவ்வாறு சேமித்தால், ஆண்டின் இறுயில் உங்களிடம் 68,900 ரூபாய் இருக்கும்.
செலவழிக்கா சவால்
இது ஒரு வேடிக்கையான சவால். நீங்கள் ஒரு வாரயிறுதி அல்லது ஒரு வாரத்தை தேர்வு செய்துகொண்டு அந்த வாரத்தில் எதற்கும் செலவு செய்யாதீர்கள். பில்கள் போன்ற அத்தியாவசிய செலவுகள் இதற்கு விதிவிலக்கு.
செலவு செய்யாமல் கொஞ்சம் பணத்தை மிச்சப்படுத்தலாம் என்ற எண்ணம் வேடிக்கையாக இருக்கலாம். உங்களுக்குத் தேவையான ஒரு Gadgets ஐ திடீரென்று வாங்க முடியாமல் போகலாம். புதிய ஆடைகளை வாங்குவதற்குப் பதிலாக உங்கள் அலமாரியில் உள்ள பழைய ஆடைகளையே பயன்படுத்தலாம். உங்கள் வார இறுதி பயணங்களை தள்ளி போடலாம். உண்மையில் தள்ளிப்போடும் விஷயங்கள் உங்களுக்கு ஒரு பொருள் உண்மையில் தேவையானது தானா என்பதை உணரவைக்கும்.
சமையலறை சவால்
இந்தக் காலத்திற்கான ஒரு நல்ல சேமிக்கும் சவாலாகவும். சமையலறை சவால் என்பது உங்கள் குளிர்சாதனப் பெட்டி மற்றும் சரக்கறையில் உள்ள அனைத்து பொருட்களும் தீரும் வரை நீங்கள் எந்தவொரு புதிய பொருளையும் வாங்க கூடாது. வெண்டைக்காய், தேங்காய் போன்ற பொருட்கள் இல்லாவிட்டாலும், இருப்பதை கொண்டு சமைப்பது சாப்பிடவும், சில நாட்கள் அல்லது வாரங்களுக்கு பணத்தை சேமிக்க இந்த சவால் உங்களுக்கு உதவும்.
சில்லறை சவால்
பலர் இதை இப்போதும் செய்கிறார்கள், நீங்கள் அதை முறைப்படுத்தலாம். நீங்கள் ஒரு கடையில் சில்லறையை பெற்றால், அதை ஒரு ஜாடியில் சேர்க்கவும். ஒரு வருடத்திற்கு இதைச் செய்து, இறுதியில் உங்களிடம் எவ்வளவு இருக்கிறது என்பதைப் பார்க்கவும் – பின்னர் அணைத்து நாணயத்தையும், நாணயம் வாங்கும் கடைகளில் கொடுத்தால் 100 ரூபாய்க்கு 105 ரூபாய் தருவார்கள். சிறுவர்களிடம் இதை ஊக்குவிக்கலாம்.
பண்டிகை சவால்
இந்த யோசனை ஒன்றும் புதியதல்ல. பல பரிசு சீட்டுக்கள் தீபாவளி சேமிப்புக் கணக்குகளை வழங்குகின்றன. ஒவ்வொரு வாரமும் 500 அல்லது 1000 ரூபாயை நீங்கள் சேமிக்க வேண்டும். பின்னர் தீபாவளி பண்டிகையின் போது அந்த பணத்தை பயன்படுத்தலாம்.
கடந்த பண்டிகை நாட்களில் எவ்வளவு செலவு செய்தீர்கள் என்பதை பொறுத்து உங்கள் அடுத்த இலக்குத் தொகையை அடைய, ஒவ்வொரு வாரமும் எவ்வளவு ஒதுக்க வேண்டும் என்பதைக் கண்டறியலாம்.
தண்டனை சவால்
நீங்கள் நிதி ரீதியாக முட்டாள்தனமாக ஏதாவது செய்யும்போதெல்லாம், உண்டியலில் அல்லது சேமிப்புக் கணக்கில் 500 ரூபாய் அல்லது நீங்கள் விரும்பும் ஏதோவொரு தொகையை போடவும். விதிகளை நிர்ணயம் செய்துகொள்ளுங்கள் எடுத்துக்காட்டாக, நீங்கள் தாமதமாக பில் செலுத்தினால், தேவையற்ற பொருளை வாங்கினால். இதுபோன்ற விதிகளைக் மீறினால் – தண்டனை கட்டணத்தை செலுத்துங்கள்.
ஆண்டு இறுதியில் உண்டியலில் நிறைய பணம் இருந்தால், நீங்கள் உங்கள் நிதியை சரியாக கையாளவில்லை என்று அர்த்தம். உங்களிடம் எதுவும் இல்லை என்றால், நீங்கள் நிதியை சரியாக கையாண்டுள்ளீர்கள். உங்களுக்கு ஒரு சபாஷ் போட்டுக்கொள்ளுங்கள்.
365 சேமிப்பு சவால்
ஜனவரி 1 ம் தேதி தொடங்குங்கள். முதல் நாள் 1 ரூபாய், இரண்டாம் நாள் 2 ரூபாய், மூன்றாம் நாள் 3 ரூபாய் இவ்வாறு வருடத்தின் எத்தனையாவது நாளோ அந்த நாளுக்கான தொகையை சேமியுங்கள்.
365 ஆம் நாள், அதாவது டிசம்பர் 31 ஆம் நாள் உங்களிடம் 66,795 ரூபாய் இருக்கும்.
உணவக சவால்
2019 ஆம் ஆண்டு தரவுகளின்படி, சராசரி இந்திய குடும்பம் வெளியே உணவருந்துவதற்கு மாதம் 2,500 ரூபாய் செலவிடுகிறது.
ஒரு மாதத்தில் ஹோட்டலில் நீங்கள் சாப்பிடவில்லை என்றால் 2,500 ரூபாய் சேமிக்கலாம்.
வெளியே உணவருந்துவதை விட அல்லது ஆர்டர் செய்வதை விட, உணவை நீங்களே தயாரிப்பது மலிவானது மற்றும் ஆரோக்கியமானதும் கூட.
சனிக்கிழமை சவால்
ஒவ்வொரு சனிக்கிழமையும், உங்கள் வங்கிக் கணக்கில் உங்கள் ஊரின் வெட்பநிலைக்கு ஏற்ற பணத்தைச் சேமியுங்கள். இதன் பொருள், கோடையில் நீங்கள் குளிர்காலத்தை விட அதிகமாக சேமிப்பீர்கள். டிசம்பர் இல் புதன் கிழமை 90 டிகிரி காட்டினால், உங்கள் சேமிப்புக் கணக்கில் 90 ரூபாய் போட வேண்டும். குளிர்காலம் முடிந்து மே மாதத்தில் 110 டிகிரி காட்டினால், உங்கள் சேமிப்புக் கணக்கில் 110 ரூபாய் போட வேண்டும்
நீங்கள் சனிக்கிழமையுடன் வேறொரு கிழமையையும் சேர்த்து கொள்ளலாம்.
நீங்கள் சென்னை போன்ற நகரில் வாழ்ந்தால், நிறைய பணத்தை இம்முறையில் சேமிக்கலாம் 😃
மளிகைக் கடை சவால்
ஒருவேளை நீங்கள் உங்கள் வீட்டின் அருகாமையில் உள்ள மளிகைக் கடையில் பொருட்களை வாங்கினால் உங்களுக்கு அதிக தள்ளுபடி கிடைக்காது. வாரந்தோறும் ஒரே மாதிரியான பொருட்களை வாங்குகிறீர்கள் என்றால். உங்கள் கடைசி ரசீதைத் பரிசீலித்து அதன்படி ஷாப்பிங் பட்டியலை தயார்செய்து மொத்த விலை மளிகைக் கடையில் வாங்கினால் உங்களுக்கு நிறைய தள்ளுபடி கிடைக்கும்.
சம்பளத்தில் 5% சவால்
உங்கள் வருடச் சம்பளத்தில் 5% என்ன எவ்வளவு என்பதைக் கண்டறியவும். உதாரணமாக, நீங்கள் ஒவ்வொரு வருடமும் 6,00,000 ரூபாய் சம்பாதித்தால், அதில் 5% 30,000 ரூபாய் ஆகும். எனவே நீங்கள் அந்த தொகையை எடுத்து வைத்துவிட்டு மீதி தொகைக்கு பட்ஜெட் போடலாம்.
பழக்க விடுதல் சவால்
நீங்கள் புகை பிடிப்பவரா? தினமும் அதிக டீ குடிப்பவரா? ஏதேனும் ஒரு மிகையான பழக்கம். ஒவ்வொரு நாளும் டீ க்கு வெளியே செல்வது, புகைபிடிப்பது போன்ற செயல்கள் உங்கள் பணத்துடன் உங்கள் உடலையும் வீணாக்குகின்றன.
எந்தப் பழக்கத்தை நீங்கள் கைவிட விரும்பினாலும், இது ஒரு நல்ல சவாலாக இருக்கும்.
இந்த சவாலில் சேமித்த பணத்தை உங்கள் குடும்பத்திற்கு செலவிடுங்கள். அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாய் இருக்கும்.