வாழ்க்கையில் தாமதமாகக் கற்றுக்கொள்ளும் பணம் பற்றிய 7 உண்மைகள்
இளமையில் வறுமை மிகக்கொடியது அதே போன்றது தான் முதுமையில் வறுமையும். இளமையிலாவது என்றோ ஒரு நாள் சாதித்து விடலாம் என்ற நம்பிக்கை இருக்கும். ஆனால் முதுமையில் வெறுமையுடன் இயலாமை மட்டுமே மிச்சமிருக்கும்.
இயலாமை – மிக கொடியது. குறிப்பாக அந்த காலகட்டங்களில் உங்களால் எதுவும் செய்ய இயலாது. வாழ்க்கையை மிகவும் சிறப்பாக வாழ்ந்திருக்க முடியும் என்பதை பிற்பகுதியில் உணரும்போது பலருக்கும் மிஞ்சுவது இயலாமை தான். இளமை பருவத்தில் பணம் குறித்த புரிதலில்லை. கிடைத்த சில வாய்ப்பையும் சரியாக பயன்படுத்தவில்லை. ஒருவேளை நான் நன்றாக சம்பதித்த காலத்தில் பணத்தை சேமித்திருந்தால் எனக்கு இந்த நிலை வருமா என்று நீங்கள் வருந்தும்பட்சத்தில், முதுமை உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் குழந்தைகளுக்கும் வருத்தங்கள் நிறைந்ததாகவே இருக்கக்கூடும்.
இதைத் தவிர்க்க, இந்த கட்டுரையில், நாம் வாழ்க்கையில் தாமதமாகக் கற்றுக் கொள்ளும் பணத்தைப் பற்றிய சில உண்மைகளைக் காணலாம். இந்த உண்மைகளைக் கற்றுக்கொள்ள உங்கள் முதுமை வரை காத்திருக்க தேவையில்லை. இப்போதே அதனை கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் முதுமையை அல்லது ஓய்வு காலத்தை மகிழ்ச்சியுடன் செலவிடுங்கள்.
பணம் குறித்த சில உண்மைகள்:
1.பணத்திற்காக உழைக்க வேண்டியதில்லை.
பணம் ஒரு மோசமான முதலாளி ஆனால் நல்ல வேலையாள். அதனால் பணத்திடம் வேலை வாங்க கற்றுக்கொள்ளுங்கள். பணம் உங்களுக்கு வேலை செய்யும். நீங்கள் தூங்கிக்கொண்டிருக்கும் போதும், உங்களுக்காக வேலை செய்யும்.
பணம் உங்களுக்கு வேலை செய்ய, நீங்கள் செய்ய வேண்டியது முதலீடு. முடிந்தவரை சீக்கிரம் முதலீடு செய்யுங்கள். சரியான முதலீடுகளை தேர்ந்தெடுத்து செய்வது உங்கள் பணத்தை உங்களுக்காக வேலை செய்ய வைப்பதற்கான ஒரு வாய்ப்பாகும்.
2. மித வேகம் மிக நன்று.
பேருந்தில் இந்த வாசகத்தை நீங்கள் வாசித்திருக்கலாம். அது பணத்துக்கும் பொருந்தும்.
பாதுகாப்பற்ற முதலீடுகள் மற்றும் போன்சி திட்டங்களைக் கண்டறியுங்கள். அவற்றில் எக்காரணம் கொண்டும் முதலீடு செய்யாதீர்கள். இத்திட்டங்களை கண்டறிவது சுலபம் தான், குறுகிய காலத்தில் மிக அதிக வருமானத்தை தருவதாக வாக்குறுதி அளிக்கும் எந்த திட்டமும் பாதுகாப்பற்ற திட்டமே.
நிறைய பேர் ஏமாந்து இதைக் கற்றுக்கொள்கிறார்கள். அடுத்தவர் வாழ்விலிருந்து பாடங்கள் படிப்பது தான் புத்திசாலித்தனம். இத்திட்டங்களில் இருந்து தள்ளி இருங்கள். உங்கள் மூலதனத்தை பாதுகாப்பதே உங்கள் முதல் நோக்கமாக இருக்கட்டும்.
3.நேரம் மற்றும் சுதந்திரம்.
பெரும்பாலான நேரங்களில், நாம் விரும்பும் பொருட்களை வாங்குவதற்கான ஒரு பொருளாக பணத்தைப் பார்க்கிறோம். ஆனால் உண்மையில் பணம், உங்களுக்கான நேரம் மற்றும் சுதந்திரத்தை நிர்ணயம் செய்கிறது. நீங்கள் உருவாக்கும் செல்வம் உங்களுக்கு சுதந்திரத்தை தருகிறது. நீங்கள் விரும்பியதைச் செய்வதற்கான சுதந்திரம்.
கற்பனை செய்துகொள்ளுங்கள்: நீங்கள் ஓவியனாக இருக்கலாம் ஆனால் பணத்திற்காக ஏதோ ஒரு அலுவலகத்தில் குமாஸ்தா வேலை செய்துகொண்டிருப்பீர்கள். ஒருவேளை உங்களிடம் பணம் இருந்தால் நீங்கள் ஓவியனாகவே தொடரலாம்.
பணத்திற்காக – நீங்கள் வேலை செய்யவேண்டிய அவசியமில்லையெனில். உங்கள் கலையை அல்லது திறமையை தியாகம் செய்ய தேவையில்லை.
4. பொறுமை அவசியம்
நீங்கள் இன்று முதலீடு செய்யத் தொடங்குகிறீர்கள், ஆனால் நாளையே நீங்கள் கோடீஸ்வரனாக வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது. ஆரம்ப காலங்களில் முதலீடு உங்களை சலிப்படைய செய்யும். மேலும் அந்த முதலீட்டை உடைத்து ஆடம்பர பொருட்கள் வாங்க தூண்டும். பொறுமையாக இருங்கள்.
சீனா மூங்கில் மரத்தை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? எந்தவொரு தாவரத்தையும் போலவே, சீன மூங்கில் மரத்தையும் வளர்க்க – நீர், வளமான மண், சூரிய ஒளி போன்றவை வேண்டும். முதல் ஆண்டில், வளர்ச்சியின் வெளிப்படையான அறிகுறிகள் எதுவும் தெரியாது. இரண்டாவது ஆண்டில், மீண்டும், மண்ணுக்கு மேலே எந்த வளர்ச்சியும் தெரியாது. மூன்றாவது மற்றும் நான்காவது ஆண்டில், இன்னும் அறிகுறிகள் தெரிவதில்லை. உங்கள் பொறுமை சோதிக்கப்படும், நம் முயற்சிகளுக்கு எப்போதாவது பலன் கிடைக்குமா என்று யோசிப்பீர்கள்.
இறுதியாக ஐந்தாவது ஆண்டில் சீன மூங்கில் மரம் ஆறு வாரங்களில் 80 அடி (கிட்டத்தட்ட 30 மீ) வளரும்.
இது போல தான் முதலீடும்.
5. விலையுயர்ந்த பொருட்களை யாரும் சட்டைசெய்வதில்லை..
பலர் தங்கள் பொருட்களை விலையால் விவரிக்கிறார்கள். “எனது 50,000 ரூபாய் மொபைல் போன்” அல்லது “எனது 25,000 ரூபாய் ஸ்மார்ட் வாட்ச் “. எதற்காக அடுத்தவரை நம் கவர முயற்சிக்க வேண்டும்? உங்கள் போனையோ அல்லது வாட்சையோ வைத்து தான் உங்களை மதிப்பிட வேண்டுமா?
25,000 ரூபாய் வாட்ச்சில் காட்டும் அதே நேரத்தை தான் 1,000 ரூபாய் வாட்சிலும் பார்ப்பீர்கள் இல்லையா?
ஆடம்பரத்திலும் நன்மைகள் உள்ளன ஆனால் அது அடுத்தவரை கவர நீங்கள் உபயோகிக்கும் பட்சத்தில் தவறு செய்கிறீர்கள்.
6. சம்பளம் இலவசம் அல்ல.
நாம் பணத்திற்காக உழைக்கிறோம் என்பதை பலர் மறந்து விடுகிறார்கள். சம்பளம் – உங்கள் நேரம் மற்றும் உழைப்பின் மதிப்பு. உங்கள் சம்பளத்தை மதியுங்கள். அற்ப விஷயங்களுக்கு சம்பளத்தை செலவிடாதீர்கள் ஏனேனில் அது உங்கள் உழைப்பு. உங்கள் ஒரு மாத உழைப்பிற்கு இணையான மொபைல் போன் உங்களுக்கு தேவையா? சிந்தியுங்கள்!
7. வசதிக்குக் கீழே வாழுங்கள்.
உங்கள் வசதிக்கு கீழே வாழ கற்றுக்கொள்ளுங்கள். உங்களால் 40 லட்சம் கொடுத்து ஆடி கார் வாங்கும் வசதி இருந்தால் 20 லட்சத்தில் ஒரு நல்ல காரை வாங்குங்கள். உங்கள் வசதிக்கு ஈடாக வாங்கும் பட்சத்தில் அந்த பொருளின் மறைமுக செலவுகள் உங்கள் செல்வத்தை பாதிக்கும்.
செல்வத்தை வளர்க்க இரண்டே வழிகள் தான் ஒன்று வருமானத்தை பெருக்க வேண்டும் அல்லது செலவுகளை குறைக்க வேண்டும்.
ஒருகாலத்தில் நான் எப்படி இருந்தேன் தெரியுமா?
என்று தான் இழந்த செல்வத்தை நினைத்து பெருமை கொள்கிறவர்களை நீங்களும் கண்டிருக்கலாம். செல்வத்தை பாதுகாக்க தெரியாமல், சம்பாதிக்க வழி தெரியாமல் அல்லது பணத்தை பெருக்க வழி தேடாமல் எல்லாவற்றையும் இழந்துவிட்டு கடைசியாக பெருமை பேசி கொள்வதில் என்ன பயன்.
ஆகையால் பணம் பழகுங்கள்!
நிதி கல்வியறிவு, நிதி சுதந்திரம் கற்றுக்கொள்ளுங்கள்!